Thursday, October 5, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 07 - எம்.ரிஷான் ஷெரீப்



     சிறைச்சாலைகளைத் தாண்டிச் செல்ல நேரும்போதெல்லாம் ஒரு வாக்கியம் அதன் வாயிலில் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றிருக்கிறோம். எல்லோருக்குமே கண்கள் இருக்கின்றன. ஆனாலும் எம்மைப் பாதிக்காதவற்றை நாம் காண்பதில்லை என்பதே நிதர்சனம். 'சிறைக்கைதிகளும் மனிதர்களே'.

     இந்த வாக்கியத்தை வெறும் வாக்கியமாகக் கருதி நாம் இதனை வாசித்து விட்டு எளிதாகக் கடந்து விடுகிறோம். ஆழ்ந்து நோக்கும்போதே இதன் உள்ளார்ந்த அர்த்தம் எமக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது.

     சடுதியாக மனிதனுக்கு ஏற்படக்கூடிய கோபத்தின் காரணமாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்பாலும், போதையின் தாக்கத்தாலும், வலியவர்களது தூண்டுதல்களின் காரணத்தாலும் சிறியதாகவும், பாரதூரமாகவும் குற்றங்களைச் செய்துவிட்டு, எம்மைப் போன்ற சக மனிதர்கள் பலரும், இதனை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் கணத்திலும் கூட சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிறைச்சாலைக்கு வெளியே வெகு சுதந்திரமாக உலவித் திரியும் பயங்கரமான குற்றவாளிகளைப் போலவே, நீதி தேவதையின் கண்கள் பணத்தினாலும், அதிகாரத்தினாலும் கட்டப்பட்டிருப்பதன் காரணத்தால் அநீதமாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகள் பலரும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், நடுத்தர மக்களையும், வறியவர்களையும் குற்றவாளிகளாக்குவதில் பெரும் பங்கு மதுவிடம் இருக்கிறது. மதுபோதை ஏற்படுத்தும் தாக்கத்தினால் குற்றங்களைச் செய்து சிறைக்குச் சென்று பின்னர் தமது நிலைமைக்காகவும், தாம் செய்த குற்றத்துக்காகவும் வருந்துவோர் அநேகம். சடுதியாக சிறைக்குச் சென்று அங்கு தமது ஜீவிதத்தைத் தொடர நேரும் இவ்வாறான சிறைக் கைதிகளை விடவும், தமது வாழ்வாதாரங்களுக்காக இவர்களையே நம்பியிருந்த குடும்பங்கள்தான் இவ்வாறான கைதுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

     இந்த சூழ்நிலையையே சிங்களக் கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் 'அந்தகாரத்துக்கு முன்பு' எனும் சிங்கள மொழிக் கவிதை மிகத் தெளிவாகவும் காத்திரமாகவும் எடுத்துரைக்கிறது.


அந்தகாரத்துக்கு முன்பு


வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ


அமாவாசைக் கனவுகள் வந்து
தம்பியை அச்சுறுத்துகையில்
நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட
யாருமில்லை வீட்டில் இப்பொழுது
இன்றிரவு சொந்தங்கள்
எம் குடிசையில் விழித்திருப்பர்
எவ்வாறிருக்குமோ நாளை
நாம் உணரும் அந்தகார இருள்


வண்ணத்துப் பூச்சிகளே
மெதுமெதுவாக
மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்
இனி
பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்
உறைந்துவிடும் அம்மாவின் வாசனை


அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு
மயானத்துக்கு வந்து நாளை
கூட்டிச் செல்லுங்கள் அப்பா
சிறைச்சாலைக்கு எம்மையும்


     மது போதை ஏற்படுத்திய தாக்கத்தில் மனைவியைத்தாக்கி, அதில் படுகாயமடைந்த மனைவி இறந்து விடுகிறாள். அத் தம்பதிகளுக்கு வண்ணத்துப்பூச்சியோடு கதைத்துத் திரியும் பருவத்திலொரு மூத்த குழந்தையும், அதற்குத் தம்பியொன்றும் இருப்பது கவிதையின் வரிகளில் புலப்படுகிறது. தந்தையைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றிருப்பதுவும், தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததன் பிறகு அக் குழந்தைகள் துணைக்கு யாருமற்று தனித்து விடப் போவதையும் இக் கவிதை காத்திரமாக எடுத்துரைக்கிறது அல்லவா?

     இவ்வாறாக சிதைந்து போகும் வாழ்வியல், ஒரு சமூகத்துக்கு மாத்திரமானதல்ல. உலகில் போதையின் பிடியில் செய்யப்படும் குற்றங்களே அநேகமானவையாக இருக்கின்றன. கவிதைகள் வாழ்வியலையே எடுத்துரைக்கின்றன. அவ்வாறான கவிதைகள் மனிதர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துமானால் அவை மிகச் சிறந்த கவிதைகளாக மாறி விடுகின்றன. அவ்வாறாக, கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் மிகச் சிறந்த கவிதைகளிலொன்று இது.

     கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்ன 1980 களில் நடைபெற்ற புரட்சிகளில் பங்குகொண்ட முக்கியமான இலக்கியவாதி ஒருவர். 'சந்திரா' என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவர் இடதுசாரிப் போராளியாகத் திகழ்ந்தவர். அதனால் அவரது கவிதைகள் அனைத்துமே மக்களின் மீட்புக்காகவே இருந்தன. அவரைக் குறித்து அச்சம் கொண்ட அப்போதைய அரசால்  எண்பதுகளின் இறுதியில் அவர் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 05 இங்கே 
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 06 இங்கே