Monday, June 1, 2015

அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்


இதற்கு முன்னர் ஒருபோதும்
என் போன்ற யுவதியொருத்தியை
சந்தித்ததில்லையென
தம் மனைவியரிடத்தில் சவால்விடுத்தனர்
எனினும்
அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்

எனது வீடு பரிசுத்தமானதெனச் சொன்னது அவர்கள்தான்
நானுரைத்த எச் சொல்லிலும் தப்பான எதுவுமிருக்கவில்லை
எப்போதும் என்னிடத்தில் அமைதியான தென்றலிருந்தது
எனினும்
அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்

அனைத்து ஆண்களினதும் உரையாடல்கள்
என்னைப் பற்றித் துதி பாடின
அவர்கள் எனது புன்னகையை விரும்பினர்
எனது மடியில்
நவநாகரீகத்தில் ஆர்வம் கொண்டனர்
எனினும்...

அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்


- மாயா ஏஞ்சலோ  
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ (1928 - 2014) :

            1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர்.

            தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன. 
  
நன்றி 
# அம்ருதா இதழ், மலைகள் இதழ், 
பதிவுகள் இதழ், 
இனியொரு இதழ், 
காற்றுவெளி இதழ், வல்லமை இதழ், வார்ப்பு இதழ்

Tuesday, May 5, 2015

சகோதரிகள் இருவர்

சகோதரிகள் இருவர்
(ஆபிரிக்க தேசத்துச் சிறுகதை)
- அஹ்மத் ஈஸொப்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

            "எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. அவங்க என்ன செய்றாங்கன்னு எனக்குத் தெரியாது. வீட்டில சாப்பிடவும் எதுவுமிருக்காது. அப்படி எதுவும் இருந்தாலும் நாங்கதான் சமைக்க வேணும். பிறகு அவங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நாங்க சமைச்சு வச்ச சாப்பாடு எல்லாத்தையும்  விழுங்கித் தள்ளுவாங்க."

            "ஏன் நீ அப்பாக்கிட்ட சொல்லக் கூடாது?"

            "அந்தப் பொம்பளையக் கல்யாணம் கட்டினதிலிருந்து அப்பா நாங்க சொல்ற எதையுமே கேட்குறதில்ல. அப்பா நல்ல மனுஷன்தான். ஆனா அந்தப் பொம்பளையைக் கல்யாணம் கட்டினதுக்கப்புறம் அவர்க்கிட்ட இருந்த நல்ல குணங்களெல்லாம் காணாமப் போயிடுச்சு. அவள் அவரை நாசமாக்கிட்டாள். அப்பா எங்களைப் பற்றித் தேடிப் பார்க்கிறதில்ல. அதனாலதான் நான் என்னோட தங்கச்சி  ஹபீபாக்கிட்ட நாம எங்கேயாவது போயிடலாம்னு சொன்னேன். அதுதானே நிஜம் ஹபீபா?"

            "நிஜம்தான்."

            "இந்தப் பக்கம் வாடகைக்கு அறையொண்ணு இருக்குறதா கூட்டாளிகள் சொன்னாங்க. நாங்க இங்க வந்தது அப்படித்தான். "

            ருகையா என்னிடமும், எனது நண்பன் உமரிடமும் அப்படித்தான் விவரித்தாள். சகோதரிகள் இருவரும் அம் மாடி வீட்டுக்குக் குடிவந்தமை பெரிய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்தது. அவர்கள் காற்சட்டையும், நீண்ட ஆடையும் அணிந்திருந்தனர். அதிலேதும் வினோதமாக இல்லை. ஆனால் வினோதமாக இருந்தது அவர்களது தலைமயிரின் நிறம்தான். அவர்களது தலைமயிர் செம்பு நிறத்திலிருந்தது. அவர்களது உடல் நிறத்தோடு செம்பு நிறத் தலைமயிர் சிறிதும் பொருந்தவில்லை. அடர்த்தியாக வளர்ந்திருந்த அவர்களது கூந்தல் கீழ்படியாது அடிக்கடி முகத்தில் விழுந்த காரணத்தால் அதனைச் சரிசெய்து கொள்வதற்காக அவர்கள் அடிக்கடி கூந்தலோடு போராட வேண்டியிருந்தது. எனது நண்பன் உமர் அதனை இப்படி விவரித்தான்.

            "அவர்கள் உல்லாசமான யுவதிகள் என்பதைத்தான் அவர்களது கூந்தல்கள் வெளிப்படுத்துகின்றன"

             ருகையா முப்பது வயதைத் தாண்டியவளாக தெரிந்ததோடு ஹபீபா அதை விடவும் வயது குறைந்தவளாகத் தெரிந்தாள். அதிக நாட்கள் செல்லும் முன்பே அவர்களது ஆடைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று பெண்களின் இயல்பு என்பதால் அல்லது நவீன நாகரிகத்தின் தூண்டுதல் காரணமாக சகோதரிகள் தாம் முன்னர் அணிந்த நீண்ட ஆடைகளைத் தவிர்த்துவிட்டு மேற்கத்தேய ஆடைகளை அணியப் பழகியிருந்தார்கள்.

            உமரும் நானும் அச் சகோதரிகளை நேசிக்கத் தொடங்கியிருந்தோம். நான் இளையவளான ஹபீபாவைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எமது புறத்தில் அவ்வாறான  விசேட தெரிவொன்றும் இருக்கவில்லை. ஆகவே அவர்கள்பால் ஈர்க்கப்பட்ட நாம் இலேசான மனதோடு காதலிக்க ஆரம்பித்தோம்.

            ஹபீபா எப்பொழுதுமே உதைத்தபடியும், ஆடியபடியுமிருக்கும் ஒரு பெண்ணாக இருந்தாள். அவளது உடலானது, முடுக்கிவிடப்பட்ட இயந்திர விளையாட்டுப் பொருளொன்றைப் போன்றது. அவள் நடக்கும்போது கூட விளையாட்டுப் பொருளொன்றைப் போல உதைத்தபடியும், தடுக்கியபடியுமே நடந்தாள். ஒருமுறை இடது பக்கமும், மறுமுறை வலது பக்கமும் திரும்பியபடியும் அடிக்கடி பின்னால் திரும்பித் திரும்பி பார்த்தபடியும் யாரையோ பார்த்து பயந்தது போல நடந்து செல்வாள். அவளது கை கால்களை தொண்ணூறு பாகைகளுக்கே திருப்ப முடியும். தலைகீழாக ஆணியடிக்கப்பட்ட படுக்கையொன்றில் கிடப்பவளைப் போல அவள் நடந்துகொண்டாள். அவளை முத்தமிட்டபோது ஒரு புதிய உணர்வை நான் அடைந்தேன். சரியாகச் சொன்னால் ஒரு நடமாடும் எலும்புக் கூட்டை முத்தமிட்டது போன்ற உணர்வு அது.

            காலம் செல்லச் செல்ல உமரும், நானும் அச் சகோதரிகள் கூட்டணி மீது சலிப்படைந்திருந்தோம். எங்களிடமிருந்து விலகிய அவர்கள் வேறு காதலர்களைத் தேடிச் சென்றார்கள்.

            நேர்த்தியாக உடுத்துக் கொண்டு, தமது அறையிலிருந்து வெளியேறி அவர்கள் படியிறங்கிச் செல்வதை காலையில் எவரும் காணலாம். ருகையா முன்னாலும், அவளுக்கு பாதுகாப்பளிப்பதுபோல ஹபீபா அவளுக்குப் பின்னாலும் நடந்துசெல்வர். அவர்கள் பிரதான தெருவுக்குள் நுழைந்து தமது அலுவலகத்துக்குப் போவதற்காக ட்ராம் வண்டியில் ஏறுவர். சகோதரிகள் இருவரும் விற்பனைப் பிரதிநிதிகளாக கடையொன்றில் வேலை செய்தனர். மாலையில் திரும்பிவரும் அவர்கள் உணவு தயாரித்து உண்டு, பாத்திரங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு அழகாக உடுத்துக் கொண்டு, சில நாட்களில் மிக அழகான சேலைகளை உடுத்துக் கொண்டு காத்திருப்பர். மோட்டார் வாகனங்களில் வரும் மனிதர்கள் அவர்களைக் கூட்டிச் செல்வர்.

            சகோதரிகள் இருவர் குறித்தும் அயலில் வசிக்கும் பெண்களினது நிலைப்பாடானது, அமைதியான வெறுப்பில் தொடங்கி கடும் எதிரிகளாக எண்ணும்வரை வளர்ந்தது. அவர்களது அயல்வீடுகளில் வசித்த  திருமணமான ஆண்கள், தம் மனைவிமாரின்  கண்காணிப்புக்குள்ளானதன் காரணத்தால் அச் சகோதரிகளை நெருங்க முடியவில்லை. ஆனால் திருமணமாகாத இளைஞர்கள் அவர்களை வட்டமிட்டனர். சகோதரிகள் இருவரும் அவர்களது காதலர்களிடையே கை மாறியபடியே சென்று இறுதியில் நரகத்துக்குப் போகப் போவதாக அஸீஸ்கான் எதிர்வு கூறினார்.

            சனிக்கிழமையின் மாலை வேளைகளிலும், ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளைகளிலும் சகோதரிகள் இருவரும் கட்டைக் களிசானும், குட்டைப் பாவாடையும் அணிந்து தமது மாடிவீட்டின் இரும்பு வேலியில் சாய்ந்து நின்றபடி கீழேயிருந்த இளைஞர்களோடு கதைத்துச் சிரித்தபடி காலத்தைக் கடத்தினர்.

            எவராலும் எதிர்வு கூறக் கூடிய விதத்தில், சகோதரிகள் இருவரும் கர்ப்பமடைந்தனர். ஆரம்பத்தில் இருவரும் கலவரப்பட்டு குற்றம் சாட்டிக் கொண்டனர். தனது கர்ப்பத்திற்கு உமர்தான் காரணம் என ருகையா குற்றம் சாட்டினாள். அவளிடமிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது.

            "எனக்கு குழந்தை கிடைக்க இருக்குன்னு தயவுசெஞ்சு உமர்கிட்ட சொல்லுங்க. குழந்தையோட அப்பா அவர்தான். நான் எப்ப வேணும்னாலும் அவரைக் கல்யாணம் செஞ்சுக்கத் தயார். அவர் என்னை விட இளையவர். அதுதான் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு."

            "எப்படித் தெரியும்?"

            "நாங்க பொண்ணுங்க. குழந்தைக்கு அப்பா யாருன்னு எங்களுக்குத்தான் தெரியும். அப்படித்தானே ஹபீபா?"

            "ஆமா. அப்படித்தான்."

            "ஹபீபா உன்னோட குழந்தைக்கு தகப்பன் யாரு?"

            "புது நகரத்துல இருக்குற ஹமீத் மஜீத். அவருக்கு கடையொண்ணும் இருக்கு."

            "இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா?"

            "நான் குழந்தையப் பற்றி அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ஆறு பிள்ளைகளும் இருக்குதென்று அவர் சொன்னார். ஆனா இந்தக் குழந்தையையும் பார்த்துப்பேன்னு சொன்னார்."

            "நீ அதிர்ஷ்டசாலி."

            "நானும் அதிர்ஷ்டசாலிதான்" என ருகையாவும் சிரித்துக் கொண்டே கூறினாள்.

            தந்தை எனும் குற்றச்சாட்டைப் பற்றி நான் உமருக்கு அறியத் தந்தேன்.

            "அவள் கர்ப்பமானது என்னாலதான்னுஅவளுக்கு எப்படித் தெரியும்?"

            "சிலநேரம் பொண்ணுங்களுக்கு இருக்குற ஞானத்தால தெரிஞ்சிருக்கும்."

            "நான் கீழ்ப்படியாத கோமாளியொருத்தன்னு அவ நினைக்கிறாளோ?"

            உமர், ருகையாவைச் சந்திப்பதைத் தவிர்த்தான். அவளிடம் தவிர்க்க முடியாத சாட்சிகளேதேனும் இருக்கும் என எண்ணிப் பயந்தான். அவனது பெற்றோர் என்ன கூறுவர்? மக்கள் என்ன கதைப்பர்? விபச்சாரியொருத்தியின் குழந்தைக்குத் தந்தை? பாடசாலைப் பிள்ளைகள் அவனைக் கிண்டல் செய்வர். மோசமான இளைஞனொருவன் குறித்து உதாரணம் கூற ஆசிரியர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடுவர்.

            சில தினங்களுக்குப் பிறகு ருகையாவைச் சந்தித்து அவளுடனான இக் கொடுக்கல் வாங்கலை முடிவுக்குக் கொண்டுவர அவன் தீர்மானித்தான். அவர்கள் வாக்குவாதம் செய்தனர். உமருக்குள் கண்ணீர், குரோதம், துயரம் பெருக்கெடுத்தது. ஆனாலும் கூட சிக்கலைத் தீர்க்க முடியவில்லை.

            ருகையா திரும்பவும் என்னை அழைத்தாள்.

            "அது என்னோட குழந்தைன்னு உமர்க்கிட்ட சொல்லுங்க. நான்தான் அந்தக் குழந்தையை வளர்ப்பேனே தவிர வேறு யாருமில்ல. உமரை நான் நேசிக்கிறேன்னு உமர்கிட்ட சொல்லுங்க. வருத்தப்பட வேண்டாம்னும் சொல்லுங்க."

            "ஆனாலும், குழந்தைக்கு கட்டாயமா ஒரு தகப்பன் வேணுமே?"

            "என்னோட குழந்தைக்கு தகப்பனொருத்தன் தேவையில்ல. தகப்பனொருத்தன் இல்லாம இருப்பதே எனக்கு சந்தோஷம். என்னோட மனசுக்குள்ள இருப்பது அப்படித்தான். என்னோட தகப்பனே எங்களைக் கவனிக்கல. அதனால என்னோட குழந்தைக்கும் தகப்பனொருத்தன் தேவையில்ல."

            "அப்போ ஹபீபா?"

            "ஹபீபாவோட குழந்தையின் தகப்பன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அப்படித்தானே ஹபீபா?"

            "ஆமா. அது உண்மைதான்."

            காலம் செல்லச் செல்ல சகோதரிகள் இருவரினதும் வயிறுகள் பெரிதாகத் துவங்கின. அயல்வாசிகளின் பண்பாட்டு உணர்வும் கோபமும் பெருக ஆரம்பித்தன.

            "வளர்ற பெண்களுக்குத் தரக் கூடிய புதுமையான வழிகாட்டல் இது" என எமது மாடி வீட்டுச் சொந்தக்காரியான பெண்ணிடம் திருமதி.மூஸா கூறினார்.

            "வளர்ற பருவத்துல எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது அவளுங்களுக்குத் தெரியலையோ?”

            "நல்லவேளை எனக்கு பெண்பிள்ளைகள் இல்ல. அதனால எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல."

            "இதுக்கு ஏதாவது செய்யச் சொல்லி நான் என்னோட புருஷன்கிட்ட கதைக்க வேணும். அடுத்த வீட்டுல கல்யாணமாகாத கர்ப்பிணிப் பொண்ணுங்க இருக்குறதை நாங்க பார்த்திட்டிருக்கிறதெப்படி? அடுத்தது, என்னோட மூத்த மகள் அவங்களோட கூட்டாளி."

            பாதி சீன வம்சாவளியில் வந்த திருமதி. மூஸா இப்படிக் கூறினார்.

            "கல்யாணமாகாத பொண்ணுங்க ஒருபோதும் கர்ப்பமாக மாட்டாங்கன்னு என்னோட அம்மா அடிக்கடி சொல்வார்."

            "ஆமா. அது சரிதான்" என மலாய் இனப் பெண்ணான ஹலீமா அதனை ஏற்றுக் கொண்டாள்.

            "கேப்டவுன் நகரத்தில் பொண்ணுங்க ரொம்ப நல்லா நடந்துக்குவாங்க. அவங்க ஆம்பளைங்க கூட சுத்தினாலும் கூட, தங்களைப் பாதுகாக்கவும் தெரிஞ்சவங்க."

            "ரெண்டு பேருமே ஒண்ணா கர்ப்பமானது எப்படின்னுதான் எனக்குத் தெரியல?" என திருமதி. காஸிம் கேள்வியெழுப்பினார்.

            "சிலவேளை ஒரே ஆம்பளை, ஒரே ராத்திரியில ரெண்டு பேரோடையும் இருந்திருப்பான்" என எனது வீட்டின் சொந்தக்காரி கூறினாள். இவ்வளவு நேரமும் தொடர்ந்து வந்த ஆழமான உரையாடலை மறந்து எல்லோருமே சிரித்தனர்.

            "அவங்க பலதார மணத்தைப் பழக்குறாங்க போல" என சொலமனின் மனைவி டோரதி சிரிப்போசையை அதிகரித்தபடி கூறினாள்

            "மன்னிக்கணும் திருமதி. சொலமன்"

            திருமதி.மூஸா குறுக்கிட்டார். டோரதி தனது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகச் சந்தேகித்துக் கோபப்பட்டார்.

            "இது பல தார மணமில்ல. அவங்க ஒருத்தனைக் கூட இன்னும் கல்யாணம் கட்டிக்கல."

            கடந்த வருடம் மக்காவுக்கு புனித யாத்திரை சென்று வந்த ஹாஜியானி பாத்திமா, அரேபியா போன்ற நாடுகளில் இந்த இருவரையும் கல்லெறிந்து கொல்வர் எனக் கூறினார்.

            "அவங்களோட மர்மஸ்தானங்களை வெட்டிப் போடணும்" என டோரதி கூறினாள். (அவள் கீழ்த்தரமான ரசனையைக் கிளப்பிவிடும் நாவல்களை வாசிப்பதற்கு அடிமையானவள்). அவள் கூறிய வசனங்களை இதற்கு முன்பு எவருமே அறிந்திராத காரணத்தால் ஏனையவர்களுக்கு அதனைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. எனவே ஏதோ ஒரு வகையிலாவது அதனைத் தெளிவு படுத்த வேண்டியிருந்தது. ஏனைய பெண்கள் பேச்சோடு நிறுத்திக் கொண்ட போதிலும், அஸீஸ்கானின் மனைவி செயன்முறைப்படுத்தத் தீர்மானித்தாள்.

            ஒரு மாலை நேரம், அவள் தனது வீட்டிலிருந்து வெளியேறி சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் போய் நின்றாள். ஆர்வத்தின் காரணமாக சுற்றியிருந்த மக்களும் அங்கே குழுமினர். சகோதரிகள் இருவரும் வந்தபோது அவள், அவர்களது வயிறுகளைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டுக் கத்தத் தொடங்கினாள்.

            "ஆஹ்... முஸ்லிம் பொண்ணுங்க....ஹ்ம்..நீங்க ரெண்டு பேரும் என்ன காரியம் பண்ணிக்கிட்டீங்க? என்ன பண்ணிட்டிருக்கீங்க? முஸ்லிம்னு சொல்லிக்குற உங்களை ஆண்டவன் தண்டிப்பான்! ஐயோ முஸ்லிம்களே..நீங்க பண்ணிக்கிட்டது!"

            அவள் நிலத்தில் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். சகோதரிகள் இருவரும் பயந்துபோய் அவளைப் பார்த்தபடியே படிகளேறிச் சென்று தமது வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடித் தாழிட்டுக் கொண்டனர்.

            திருமதி.அஸீஸ்கானின் நடவடிக்கையானது சுற்றிவர இருந்த குடியிருப்பினரது கேலிக்குள்ளானது. அவர்கள் சிறுவர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரித்தனர். எல்லோரும் தாம் வசித்துவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து சகோதரிகள் இருவரும் வசித்துவரும் வீட்டைப் பார்த்தனர். சரியாகச் சொன்னால் ஏதோவொரு துயரம் நிகழ்ந்த வீடொன்றைப் போல காட்சியளித்தது அது.

            மெல்லிய நூலிழையைப் போன்ற மெலிந்த சரீரத்தைக் கொண்ட அஸீஸ்கான் வந்து இவ்வாறு கூறினார்.

            "எனக்கு மட்டும் நேரமிருந்தால் இந்தச் சகோதரிகளுடைய மோசமான நடத்தையைப் பற்றி புத்தகமொன்றே எழுதுவேன். இந்தக் காலத்துல முஸ்லிம் ஜனங்கள் எதிர்கொள்ற ஒழுக்கச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட இவங்கதான் சரியான உதாரணங்கள். இவங்கள சிறையில அடைச்சு சாகும்வரை பட்டினி போடணும்."

            'அவர்களது கர்ப்பத்துக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல' எனும் கூற்றை ஒருவர் முன்வைத்தார். அதற்கு அஸீஸ்கான் இப்படிக் கூறினார்.

            "அவங்களுக்கு தங்களுடைய சரீரத்துல உள்ள மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியலன்னா நீங்க சொல்ல வர்றீங்க? இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுற பொண்ணுங்க தங்களோட இச்சைக்கு அடிபணிந்து நடத்தை கெட்டுப் போறதுக்கு இஸ்லாம் மார்க்கம் ஒருபோதும் இடமளிக்கிறதில்ல."

            சில மாதங்களுக்குப் பிறகு சகோதரிகள் இருவரும் பெண்குழந்தைகளிரண்டைப் பிரசவித்தனர். இந்தப் பிரசவம் குறித்தும் பல கதைகள் உலவின. சிலர் குழந்தைகள் மீது அனுதாபம் காட்டியதோடு அவற்றை எடுத்து வளர்க்கவும் தமது விருப்பங்களைத் தெரிவித்தனர். இன்னும் சிலர் 'அக் குழந்தைகளை மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டுபோய் மிருகங்களுக்குத் தீனியாக்க வேண்டும்' என்றனர். இன்னுமொருவருக்கு அவர்களது வீட்டுக்கு தீ வைக்க அவசியமாக இருந்தது.

            சகோதரிகள் இருவரையும் அவர்களது குழந்தைகளோடு மாடி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதே அஸீஸ்கானின் தேவையாக இருந்தது. அவர்கள் அங்கே தொடர்ந்தும் இருப்பதானது கலாசாரத்துக்கும், நற்பெயருக்கும், மார்க்கத்துக்கும் கேடு விளைவிக்கும்.

            வெள்ளிக்கிழமை மதியவேளை, ஜும்மாத் தொழுகை முடிந்ததன் பிற்பாடு அஸீஸ்கான் அப் பிரதேசத்தில் பிரபலமாக விளங்கிய கொலைகாரனாகிய குல்லின் வீட்டுக்குத்தான் முதலில் போனார். எனினும் குல் தனது பசியைப் போக்கிக் கொள்வதிலேயே அதிக கவனத்தைச் செலுத்தினான். கலாசாரம் பற்றிய கதையில் அவதானம் செலுத்தத் தவறிய அவன் சமிக்ஞையாகப் புன்னகைத்துக் கதவைச் சாத்தினான்.

            பிறகு அவர் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரான, புதுநகரப் பள்ளிவாயிலின் மதகுருவான ஹரூஃப் மௌலவியைத் தேடிச் சென்றார். அஸீஸ்கானைக் கூட்டிச் சென்ற மௌலவியின் ஊழியர்களில் ஒருவரான அப்துல்லாஹ் அங்கு நடந்ததை பின்னர் இவ்வாறு விவரித்தார்.

            "நாங்க முகம்கொடுக்கப் போற ஒழுக்கச் சீர்கேடு பற்றியும், பாரிய சிக்கல்களைப் பற்றியும் அஸீஸ், மௌலவியிடம் விபரித்தான். அதுக்கு அவர் என்ன சொன்னார்னு தெரியுமா? அந்த பொண்ணுங்க ரெண்டுபேருக்கும் தண்டனை தர்றது எல்லாம் வல்ல இறைவனுடைய வேலன்னு அவர் சொன்னார். கோபம் வந்த அஸீஸ் மோசமான வார்த்தைகளால மௌலவியைத் திட்டினான். மௌலவி அவரோட ஊழியர்களோட சேர்ந்து அஸீஸைப் பிடிச்சு நல்லா அடிச்சு வெளியே துரத்திட்டார்."

            வாடகை வீடுகளின் உரிமையாளர் யூசுப்பை அஸீஸ்கான் அடுத்ததாக நாடினார். குளிர்காலங்களிலும் கூட வெண்ணிற குர்தாவை அணியும் அவர் விசித்திரமான ஒரு நபராவார். அடர்த்தியான நீண்ட தாடியை வளர்த்துள்ள அவரது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. ஆழமான மார்க்கப்பற்றுள்ள அவர் நடுத்தெருவில் கூட இறைவனை நாடித் தொழக் கூடியவர். ஒரு தடவை ஈத் பெருநாள் தினமொன்றில் குரங்கொன்றையும் எடுத்துக் கொண்டு அவர் அம் மாடிவீடுகளுக்கு வந்திருந்தார். அக் குரங்கின் தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு துருக்கித் தொப்பி இருந்தது.

            "இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம். இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம் " எனக் கூறியபடி அதனை அவதானிப்பவர்களுக்கு, விஷேடமாக தனது கூலியாட்களுக்குக் கேட்கும்படி

            "ஆனா நீங்க முஸ்லிமில்ல. நீங்க முஸ்லிமில்ல" எனக் கத்தியபடி இரு கை நிறையக் காசுகளையள்ளி வீசினார்.

            அப் பெட்டை நாய்களிரண்டையும் தனக்குச் சொந்தமான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்ற யூசுப் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். அவர் அதனைத் தனியாகச் செய்வதற்குப் பொறுப்பேற்றார். தனது குடியிருப்பில் இவ்வாறான பெட்டை நாய்கள் இருப்பதற்கு இடமளிக்க அவர் தயாரில்லை.

            ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அவர், சாரதி ஓட்டிவந்த மேர்ஸடீஸ் வாகனத்தில் வந்திறங்கினார். சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் நின்றுகொண்ட அவர், அவர்களைத் தான்  தாக்கப் போவதாக பல தடவை அச்சுறுத்தினார். பீதிக்குள்ளான மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர் படிக்கட்டுகளின் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு மிகுந்த சிரமத்தோடு படியேறினார். படிக்கட்டுகளின் இடையே சற்றுத் தங்கிச் செல்ல கட்டப்பட்டிருந்த இடத்தில் சில நிமிடங்கள் நின்று இளைப்பாறினார்.

            அச்சத்தில் நடுங்கியபடி சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் கதவருகே நின்று கொண்டிருந்தனர். அவர் முதலில் ருகையாவை நெருங்கி அவளது கன்னத்தில் அறைந்து நாயே, பேயே என குஜராத் மொழியில் கத்தினார். அவரைத் தாண்டிச் செல்ல முயற்சித்த ஹபீபாவுக்கும் தலையில் அடி விழுந்தது. அவள் கீழே விழுந்து படிக்கட்டு வழியே கீழே விழப் பார்த்தாள்.

            இதற்கிடையே யூசுப் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். பீதியில் நடுங்கிக் கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறாரென வாசலருகிலேயே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர், கையில் ஒரு பாத்திரத்தோடு முன்னே தோன்றினார். அதன் பித்தளை மேற்பரப்பு சூரிய ஒளியில் மின்னியது. அவர் அதனை படிக்கட்டை நோக்கி வீசியடித்தார். அது டாங் எனச் சத்தமெழுப்பியபடி துண்டுதுண்டாக உடைந்து கீழே சிதறியது. அதனைத் தொடர்ந்து ஒரு கதிரை வந்தது. அவற்றைத் தொடர்ந்து அந்த வீட்டின் சட்டி, பானைகளெல்லாம் வர ஆரம்பித்தன. யூசுபுக்குள் எழுந்த அழிப்புணர்வு உக்கிரமடைந்ததோடு வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கு மேலதிகமாக துணிகளும் பறந்து வரத் தொடங்கின. செய்ய வழியேதுமற்ற சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் சொந்தக்காரர் தமது உடைமைகளுக்குச் செய்யும் அழிவுகளை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

            தொடர்ந்து யூசுப் குழந்தைகளிலொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தார். ருகையாவும், ஹபீபாவும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். யூசுப் ஒரு கையால் அவர்களைப் பின்னால் தள்ளிவிட்டு மறுகையால் கதறியழும் குழந்தையின் கழுத்தை நெரிக்க முயற்சித்தார்.

            இச் சந்தர்ப்பத்தில் கூட்டத்தை ஊடறுத்துக் கொண்டு படிகளிலேறியபடி சொலமன் முன்னால் வந்தார். அவர் சகோதரிகளிருவரையும் மிருதுவாக பின்னால் நகர்த்திவிட்டு யூசுப்பின் கழுத்தைப் பிடித்து அசைத்தார். அத்தோடு அவரது கைகளிலிருந்து குழந்தையைப் பறித்து தாயின் கையில் கொடுத்தார். பின்னர் யூசுபைப் பிடித்து அவரது முகத்தை கதவு நிலைக்கம்பில் சாய்த்து அழுத்தினார். யூசுப்பின் முகம் வேதனையில் துடித்தது. யூசுப்பை மிக வலிமையாக ஆக்கிரமித்துக் கொண்ட சொலமன், அவரையும் இழுத்துக் கொண்டு படியிறங்கினார். அவர்கள் நிலத்தை அண்மித்ததும் கூட்டம் அவர்களுக்கு இடமளித்தது. சிறுவர்கள் கை தட்ட ஆரம்பித்தனர். யூசுப்பை படிக்கட்டு நெடுகவும் இழுத்துக் கொண்டு வந்த சொலமன், அவரது மேர்ஸிடிஸ் வாகனத்தின் கதவைத் திறந்து அவரை உள்ளே தள்ளினார். நிலைமையை உணர்ந்த சாரதி வாகனத்தைக் கொஞ்சம் பின்னாலெடுத்து பின்னர் அங்கிருந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றான்.


            நெடுங்காலமாக எமக்கு யூசுப்பைக் காணக் கிடைக்கவில்லை. எனினும் மனநோயாளி ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் இதற்குமேலும் வசிக்க முடியாதென சகோதரிகள் இருவரும் தீர்மானித்தனர். அவர்கள் புதுநகரத்திலேயே வேறொரு வீட்டைத் தேடி, அங்கு குடியிருக்கச் சென்றனர்.

_________________________
எழுத்தாளர் பற்றிய குறிப்பு

அஹ்மத் ஈஸொப் -
    
        1931 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், தனது மூன்று வயதில் பெற்றோர் தென்னாபிரிக்காவில் குடியேறியதன் காரணமாக அங்கு வளர்ந்தவராவார். 1956 இல் தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததோடு, தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டு தனது ஆசிரியத் தொழிலைக் கைவிட்ட இவர் தொடர்ந்து முழுநேர எழுத்தாளரானார்.

            இவரது படைப்புக்களில் அநேகமானவை, தென்னாபிரிக்க சமூகத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை விபரிப்பவையாகும். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான The Hajji and Other Stories எனும் தொகுப்புக்கு 1979 ஆம் ஆண்டு 'ஒலிவ் ஷ்ரெய்னர் (Olive Schreiner) பரிசினை வென்றுள்ளார்
___________________________________________________________ 

நன்றி
- திணை, விடிவெள்ளி, மலைகள், வல்லமை மற்றும் இச் சிறுகதையைப் பிரசுரித்த அனைத்து இதழ்களுக்கும் !