Tuesday, December 15, 2009

இப்பொழுது நான் வளர்ந்த பெண்




நான் மலராக இருந்தேன். இப்பொழுது கல்.
நான் காற்றைப் போல திரிந்தேன்
இப்பொழுது தேங்கிய நீரோடை போல அமைதியானேன்
தண்ணீரைப் போல பாய்ந்தோடினேன்
இப்பொழுது பனிக்கட்டி போல உறைந்துபோனேன்

பூவாய், காற்றாய், நீராய் இருந்த காலத்தில்
சுதந்திரமாய் ஓடினேன் - பாய்ந்தேன்
கை கால் சுழற்றினேன்
கத்தி அழுதேன் அடித்தொண்டையால்
ஓங்காரமிட்டுச் சிரித்தேன்.
யாரும் அவற்றை நிறுத்தவில்லை
புத்தகங்களைக் கிழித்துப் போட்டேன் கோபம் வந்தவேளைகளில்

அவ்வாறு சுதந்திரம் இருந்த சமயத்தில்
மரங்களேறி மாங்காய் பறிக்க முடியுமாக இருந்தது
அயல்வீட்டுப் பையன்களோடு
நொண்டியபடி பாண்டி ஆடி
ஒளிந்து விளையாடினேன்
அவை குறித்து யாரும் தவறாகப் பேசவில்லை

ஆனால் இன்று?
நான் வளர்ந்த பெண்
சத்தமாகச் சிரிப்பது நல்லதல்ல!
ஓடுதல், பாய்தல் தீயது
ஓசையெழக் கதைப்பது தடுக்கப்பட்டது.
நான் விரிக்கப்பட்ட புகையிலை போன்றவள்
(பொம்பளை சிரிச்சால் போச்சு.
புகையிலை விரிச்சால் போச்சு !)

அமைதி, பொறுமை, பனித்துளி போன்ற தூய்மை
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆபரணங்கள்
பேச்சு, சிரிப்பு, பயணம், ஆடைகள்
கண்ணியமாக இருக்க வேண்டியவை
செய்யவேண்டியவை எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன
நான் கல் - உறைந்த பனி
ஆனால் நான் வளர்ந்த பெண்

மூலம் - ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.



நன்றி
# உயிர்மை

Monday, November 30, 2009

எங்களது ராஜாக்கள் அல்ல



    ஒரு தேசத்தில் மக்கள் நோய்களால் துன்புற்றுக் கொண்டிருந்தார்கள். கொள்ளை நோயைப் போன்ற கடுமையான நோய்கள் கூட பரவும் அபாயம் இருந்தது. குடிமக்கள் நோயால் இறந்துகொண்டே இருப்பதால் உடனடியாக ஏதாவது தீர்வொன்றினைக் கண்டறியும்படி அந் நாட்டு மக்கள் அரசனைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

    அரசன், தனது ராஜ சபையைக் கூட்டி விசாரித்தபோது 'சட்டதிட்டங்கள் போதாது' என்பது மந்திரி, பிரதானிகளின் கருத்தாக இருந்தது. அதனால் ஒரே இரவில் புதுத் திட்டமொன்று கொண்டு வரப்பட்டது.

    ' நோய்க்குக் காரணமான அனைத்தும் அழிக்கப்படவேண்டும்' என்பதே அந்தத் திட்டமாக இருந்தது.

    'இனி நோய்ப்பயம் நீங்கிவிடும்' என மக்கள் எண்ணினாலும், நோய் மேலும் மேலும் பரவிக் கொண்டே இருந்தது. இருந்த மருந்துகளையெல்லாம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். போலி மருந்துகள் நாடு முழுவதும் விற்கப்பட்டன. போலி வைத்தியர்களும் நிறைய உருவாகியிருந்தனர். மந்திரி, பிரதானிகளுக்கு மருந்துக் கொள்ளையர்களிடமிருந்தும், போலி வைத்தியர்களிடமிருந்தும் தீர்வை, கப்பமென நிறையக் கிடைத்தன.

    சாவுகள் முடிவின்றித் தொடர்ந்ததால் பொதுமக்கள் அரண்மனைக்கு முன் கூடி கோஷங்களை எழுப்பினர்.
   
    ' நோய்க் காரணிகள் எதுவும் அழிக்கப்படவில்லை' எனக் கூச்சலிட்டனர்.

    'நோய்க் காரணிகள் இன்னும் கொஞ்சம்தான் எஞ்சியிருக்கின்றன. அது மட்டுமன்றி, இது போன்ற வியாதிகள் மற்ற நாடுகளிலும்தான் இருக்கின்றன. உங்களில் எவனுக்காவது அதைக் கட்டுப்படுத்தும் திறமை இருக்குமென்றால் முன்னால் வரலாம்' என அரசன் கூறினான்.

    அப்பொழுது ஒரு ஆண்மகன் முன்னால் வந்தான்.

    ' இந்த வியாதிகளின் விஷக் கிருமிகள் அத்தனையையும் உன்னால் அழிக்க முடியுமா?' என அரசன் அவனிடம் கேட்டான்.

    'ஆம். முதலில் உங்கள் சட்டதிட்டத்தின்படி நோய்க் காரணிகள் - அதாவது நோய்கள் உருவாகும் சூழலும், நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்களும் அழிக்கப்படவேண்டும்' என்றான் அவன்.

    குடிமக்களும் அதையே ஏகோபித்தனர்.

    'நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்கள் யார்?' இது அரசனின் கேள்வியாக இருந்தது.

    'அவர்கள் வேறு யாருமல்ல. அரசன், மந்திரி பிரதானிகள்தான்' அவன் பதிலளித்தான்.

    கடுங்கோபங்கொண்ட அரசன்,

    'இவன் ஒரு ராஜதுரோகி. உடனே கொல்ல ஏற்பாடு செய்யுங்கள்' என அரச பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.

    'ராஜதுரோகியான பின்பு, இம் மரணதண்டனையை இல்லாமலாக்கச் செய்யும்படியான காரணங்கள் ஏதாவது உன்னிடம் இருக்கிறதா?' அரசன் அவனிடம் கேள்வியெழுப்பினான்.

    அவன் இவ்வாறு பதிலளித்தான்.

    ' உங்களது நாட்டில் எங்களுக்கென எஞ்சியிருப்பது மரணம் மட்டும்தான். நோய்க் கிருமிகளால் செத்துப் போவது அல்லது உங்களது கட்டளையின் பிரகாரம் கொல்லப்படுவது இவையிரண்டும் மட்டும்தான். இரண்டுமே உங்களது. ஆகவே நீங்களே இரண்டிலொன்றைத் தீர்மானிப்பது சிறந்தது'.

மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா 
(Mawatha anka 42 - 1987 April-June)
 

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி 
# உயிர்மை